Published : 25 Sep 2017 09:00 AM
Last Updated : 25 Sep 2017 09:00 AM
உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர உண்டியல் வருமானம் ரூ.1,000 கோடியை தாண்டியுள்ளது. மேலும், தினந்தோறும் பக்தர்கள் சுவாமிக்கு அளிக்கும் காணிக்கைகளும் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஏழை, பணக்காரர்கள் எனும் பேதமின்றி அனைவரும் அவர்களால் முடிந்த அளவு பணமாகவும், நகையாகவும் காணிக்கை செலுத்தி வருகின்றனர். உண்டியலில் செலுத்தும் பணம் ‘பரகாமணி’ எனும் பெயரால் எண்ணப்பட்டு தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணத்தின் மூலம் வரும் வட்டியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் செய்யப்படுகிறது. தற்போது தினமும் சராசரியாக ரூ. 3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி, ஆண்டுக்கு உண்டியல் மூலம் மட்டும் சுவாமிக்கு பக்தர்கள் ரூ.1,100 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
அலங்கார பிரியரான ஏழு மலையானுக்கு வைர, வைடூரிய நகைகள் ஏராளமாக பக்தர்கள் காணிக்கையான வழங்கி உள்ளனர். இதில் சக்ரவர்த்திகள் முதல் சாமானிய பக்தர்கள் வரை இன்று வரை தொடர்ந்து ஏழுமலையானுக்கு காணிக்கைகளை சமர்பித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால் இவரது நகைகளின் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. விஜய நகர சாம்ராஜ்ய அரசரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஏழுமலையானின் தீவிர பக்தராவார். இவர், ஒவ்வொரு முறையும் போரில் வெற்றிப்பெற்ற போதெல்லாம், சுவாமிக்கு ரத்தினம், தங்க நகைகள், வெள்ளி பொருட்களை காணிக்கையாக வழங்கினார் என கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் காலகட்டத்தில்தான் ஏழு மலையானின் விமான கோபுரத்திற்கு தங்க கவசம் பொருத்தப்பட்டது. மேலும் காலம் காலமாக ஏழுமலையானின் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகள் மட்டுமே இதுவரை 13,000 கிலோ உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளது.
இவைகளை மூலவர், உற்சவ மூர்த்திகள், ஸ்ரீதேவி, பூதேவிகளுக்கு அலங்கரிக்கின்றனர். மூலவருக்கு மட்டுமே வைர கிரீடங்கள் 7 உள்ளன. மேலும், தங்க கிரீடங்கள், நூற்றுக்கணக்கான தங்க ஹாரங்கள், இதர நகை வகைகள் உள்ளன. சுவாமிக்கு திருமணத்தின் போது, அவரது மாமனாரான ஆகாச ராஜன் வழங்கியதாக கூறப்படும் கிரீடம் மட்டும் 9.7 கிலோ எடை கொண்டதாகும். இவை தவிர 20,30 கிலோ எடை கொண்ட கிரீடங்களும் உள்ளன.
ஏழுமலையானுக்கு தினமும் செய்யும் அலங்காரத்தை ‘நித்ய கட்ல அலங்காரம்’ என்றழைக்கின்றனர். இதில், தங்க பாதங்கள், கடையங்கள், வங்கி, ஒட்டியானம், சங்கு சக்கரம், கர்ண பத்திரங்கள், வைகுண்ட ஹஸ்தம், கட்டி ஹஸ்தம், நாகாபரணங்கள், புஜ கீர்த்திகள், முகபட்டி, அஷ்டோத்திர தங்க காசு மாலை, துளசி மாலை, சதுர்புஜ லட்சுமி ஹாரம், ஹஸ்வத்த பத்ர ஹாரம், புலி நகம், சூரிய கட்டாரி, சகஸ்ர நாம மாலை, சந்திர கண்டி, 5 வரிசை ஹாரம், ஸ்ரீவத்சவம், கவுஸ்துபம், தங்க பீதாம்பரம் போன்றவைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. மொத்தம் மூலவரான ஏழுமலையானுக்கு தினமும் 65 முதல் 70 கிலோ தங்க ஆபரணங்கள் மூலம் அலங்காரம் செய்யப்படுகிறது. சுவாமிக்கு அலங்கரிக்கும் ஒவ்வொரு நகைக்கும் அதேபோன்று 2-வது நகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், குடியரசு தலைவர், பிரதமர் போன்றவர்கள் ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போதும், பிரம்மோற்சவம் போன்ற நாட்களிலும், மூலவருக்கு கூடுதலாக வைர ஆபரண அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த நகைகள் மட்டுமின்றி, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகள் 6.5 கிலோ வரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவஸ்தானம் வட்டியாக பணத்திற்கு பதில், தங்கத்தையே பெறுகிறது. இதனால் சுவாமிக்கு தங்கம் மேலும் பெருகி வருகிறது. இதன் மூலம் வட்டி வழியாக ஏழுமலையானுக்கு ஆண்டிற்கு 56 கிலோ தங்கம் அதிகரித்து வருகிறது.
உண்டியல் மூலம் ஏழுமலையானுக்கு ஆண்டிற்கு சராசரியாக 500 முதல் 600 கிலோ தங்க ஆபரணங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவைகளை உருக்கி, மும்பையில் உள்ள மிண்ட்டில் தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அவைகளையும் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT