Published : 09 May 2023 01:49 PM
Last Updated : 09 May 2023 01:49 PM

கோவாவில் நாளை விடுமுறை - கர்நாடக வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதற்காக நடவடிக்கை

பனாஜி: அண்டை மாநிலமான கர்நாடகாவில் வாக்களர்களாக பதிவு செய்துள்ளவர்கள் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக கோவாவில் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் அருகே இருக்கும் மாநிலமான கர்நாடகாவில் புதன்கிழமை (நாளை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் கர்நாடகாவில் வாக்காளர்களாக பதிவு செய்து கோவாவில் வசிக்கும் மக்கள், கர்நாடக சட்டப்பேரவையில் வாக்களிக்கும் விதமாக புதன்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்துள்ளது கோவா அரசு. அம்மாநில பொதுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், இந்த விடுமுறை பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவா மாநில ஆம் ஆத்மி தலைவர் ராம்ராவ் வாக் கூறுகையில், "கர்நாடக தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. எந்த வகையிலும் கோவா அரசு விடுமுறையில் தான் உள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முதல்வர் உள்ளிட்ட கோவாவின் அமைச்சர்கள் கர்நாடாகாவில் பிரச்சாரத்திற்காக தங்களின் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில தொழிற்சங்கங்கள், "ஒவ்வொரு தேர்தலுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக மாறிவிட்டால் அது கோவாவின் தொழில்களை மிகவும் பாதிக்கும். இந்த அறிவிப்பினை எதிர்க்க சட்ட ரீதியிலான வழிகளை ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது. இதனிடையில், கோவா முதல்வர் அலுவலகம், "அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது சம்பளத்துடன் விடுப்பளிப்பது ஒன்றும் புதிய நடைமுறை இல்லை" என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2022-ம் ஆண்டு கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த போது அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவை சம்பளத்துன் கூடிய விடுமுறை அளித்தது குறித்த அறிப்பு நகல்களை பகிர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x