Published : 08 May 2023 01:36 PM
Last Updated : 08 May 2023 01:36 PM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தலைநகர் பெங்களூருவில் அரசு பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, சக பயணிகளுடன் பேசியவாறுச் சென்று மக்களின் கவனம் ஈர்த்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் உள்ளது. பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக மிக இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார். பெங்களூருவின் கன்னிங்காம் சாலையில் உள்ள காஃபி ஷாப் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார்.
அங்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவர் உரையாடினார். பின்னர், அவர்களோடு பேருந்திலும் பயணித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளான பெண்களுக்கு இலவச பேருந்து சேவை குறித்தும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்தும் எடுத்துக் கூறினார். அப்போது, பேருந்து பயணங்களில் தங்களுக்கு இருக்கும் சிரமங்கள் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் அவரிடம் பெண்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, லிங்கராஜபுரம் என்ற பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடமும் உரையாடினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்தும், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார். இந்த பயணத்தின்போது ராகுல் காந்தியோடு பயணித்த சக பயணிகள், அவரோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT