Published : 08 May 2023 12:01 PM
Last Updated : 08 May 2023 12:01 PM

‘அந்த உண்மையை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப் போகிறீர்களா? ’ - பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

கபில் சிபல் | கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து கர்நாடகாவை காங்கிரஸ் கட்சி பிரிக்க விரும்புகிறது என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பதில் அளித்துள்ளார்.

மே 10-ம் தேதி (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ள கர்நாடாகவில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "கர்நாடகாவிற்கு மட்டுமின்றி, மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே இதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நேற்று (சனிக்கிழமை) தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா வந்த காங்கிரஸ் கட்சியின் ஷாஹி பரிவார், அவர்கள் கர்நாடகாவின் இறையாண்மையைக் காப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாடு சுதந்திரம் அடையும் போது அது இறையாண்மை பெற்ற நாடு என்று அழைக்கப்படும். இதன்படி காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதற்கு அர்த்தம் கர்நாடகா இந்தியாவில் இருந்து பிரிந்து விட்டதாக காங்கிரஸ் நம்புகிறது" என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் இன்று ( திங்கள்கிழமை) பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"பிரதமர் மோடி கூறுகிறார்: காங்கிரஸின் ஷாஹி பரிவார், கர்நாடகாவை இந்தியாவில் இருந்து பிரித்துவிட விரும்புகிறது என்று. இந்தியாவிற்காக இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ரத்தம் சிந்தியதை நாடே பார்த்தது. இந்த உண்மையை என்சிஆர்டி பாடபுத்தகங்களில் இருந்து நீக்கி விடப்போகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, கர்நாடகா மாநிலம் ஹுப்ளியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை பிரச்சாரத்தில் பேசியதற்கு அடுத்த நாள் அதுகுறித்து பிரதமர் விமர்சித்திருந்தார்.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் புதன்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x