Published : 07 May 2023 05:50 AM
Last Updated : 07 May 2023 05:50 AM

கர்நாடக தேர்தல் | இரண்டரை மணி நேரத்தில் 26 கி.மீ. தூரத்துக்கு பெங்களூருவில் பிரதமர் மோடி மெகா பேரணி

பெங்களூருவில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வாகனத்தில் நின்றபடி பேரணியாக சென்றார். அப்போது கட்சி தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். படம்: பிடிஐ

பெங்களூரு: கர்நாடக தேர்தல் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு பெங்களூருவில் உள்ள கோனன குண்டே சோமேஷ்வரா கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். பின்னர் மைசூரு தலைப்பாகை அணிந்து, காவி நிறத்திலான பிரச்சார வாகனத்தில் பிரதமர் மோடி நின்றவாறு சாலை பேரணி மேற்கொண்டார். வாகனத்தில் பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி. பி.சி.மோகன், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அவருடன் நின்று கையசைத்த‌னர்.

மோடியை வரவேற்கும் விதமாக சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்த மக்கள் ‘‘மோடி.. மோடி'' என வழிநெடுக கோஷம் எழுப்பினர். மேலும் அவர் மீது மலர்களை தூவினர். பதிலுக்கு மோடியும் மலர்களை தூவினர். பிரச்சாரத்தின்போது மோடி எழுப்பிய, ‘‘பாரத் மாதா கீ ஜெய், ஜெய் பஜ்ரங் பலி'' ஆகிய கோஷங்களை ஒலிபெருக்கி மூலம் வழிநெடுக ஒலிக்க செய்த‌னர். பாஜக தொண்டர்கள் பலர், மோடியின் முகமூடி அணிந்தும், ஹனுமான் வேடமணிந்தும் பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணி மூலம் 2.30 மணி நேரத்தில் 26 கிமீ தூரம் திறந்த வாகனத்தில் நின்றவாறு பயணித்து 13 சட்டப்பேரவைத் தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பிற்பகல் 12.30 மணியளவில் மல்லேஸ்வரம் காடு மல்லேஸ்ர சுவாமி கோயிலில் பேரணி நிறைவடைந்தது.

இதுகுறித்து பாஜக எம்பி பி.சி.மோகன் கூறுகையில், ‘‘இந்தப்பேரணியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 40 டன் மலர்கள் பிரதமர் மோடியின் மீது தூவப்பட்டது''என்றார்.

பின்னர் மோடி தனது சமூகவலைத்தள பக்கத்தில், ‘‘பெங்களூருவில் நான் கண்ட‌தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் மீது இவ்வளவு அன்பை பொழிந்ததற்காக இந்த துடிப்பான நகரத்தின் மக்களுக்கு தலைவணங்குகிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்து போற்றுவேன்'' என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

பிற கட்சிகளின் பிரச்சாரம் பாதிப்பு: பிரதமர் மோடியின் பேரணியால் பெங்களூருவில் 35 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர். பிற கட்சியினர் தங்களால் பிரச்சாரம் செய்ய முடியாமல் போனதாக தெரிவித்தனர். எங்களுக்கு ஏன் பெங்களூருவில் பேரணி நடத்த அனுமதி அளிக்கவில்லை என காங்கிரஸார் கேள்வி எழுப்பியுள்ள‌னர்.

திறந்த வாகனத்தில் பேரணி: இந்நிலையில் மோடி இன்று மீண்டும் பெங்களூருவில் 10 கிமீ தூரத்துக்கு திறந்த வாகனத்தில் பேரணி மேற்கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x