Published : 06 May 2023 08:24 AM
Last Updated : 06 May 2023 08:24 AM
புது டெல்லி: ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா மற்றும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் சில வாரங்களுக்கு முன்பு சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் 80 கிளினிக்குளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்: "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானத் துறை என அனைத்தையும் அவர்கள் எனக்கு எதிராக செயல்பட வைக்கின்றனர். ஏன்? ஒரே காரணம் தான். எப்படியாவது நான் ஒரு திருடன் என நிரூபிக்க வேண்டும். நான் பிரதமர் மோடியிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் அவர்களே, கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் இல்லை. கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு பைசா ஊழலை நீங்கள் நிரூபிக்கும் நாளில், என்னை பொதுவெளியில் தூக்கிலுடுங்கள் என்று நான் கூற விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னால் இந்த நாடகத்தை நிறுத்துங்கள்." இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT