Published : 06 May 2023 05:20 AM
Last Updated : 06 May 2023 05:20 AM

‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

கொச்சி: ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த திரைப்படம் நேற்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது.

பாலிவுட் தயாரிப்பாளர் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கேரள உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் நாகரேஷ், சோபி தாமஸ் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது: திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தோம். இதில் முஸ்லிம் மதத்துக்கு எதிராக என்ன இருக்கிறது? ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மீதே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எந்தவொரு சமுதாயத்தின் மீதும் முன்னோட்டத்தில் குற்றம் சாட்டப்படவில்லை. மனுதாரர்கள் யாருமே திரைப்படத்தை பார்க்கவில்லை. முன்னோட்டத்தை பார்த்து எந்த முடிவுக்கும் வரக்கூடாது.

இந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் இந்து சாதுக்களை கடத்தல்காரர்களாகவும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளாகவும் சித்தரித்து பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த திரைப்படங்கள் குறித்து யாரும் போராடவில்லை. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், திரைப்படத்தை ஆய்வு செய்து அனுமதி வழங்கி உள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பது போன்று கலையுலக சுதந்திரத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

மலையாள திரைப்படம் ஒன்றில் இந்து கடவுள் சிலையின் மீது உமிழ்வதாக ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த திரைப்படம் விருதினை வென்றது.

கேரளாவில் மதச்சார்பற்ற மக்கள் வசிக்கின்றனர். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒரு கற்பனை கதை, வரலாறு கிடையாது. இந்த திரைப்படத்தால் மதவாதம், பிரிவினைவாதம் தூண்டப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது. 6 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் நாகரேஷ், சோபி தாமஸ் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நேற்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியானது.

முதல் நாளில் ரூ.10 கோடி வசூல்: இந்தி திரையுலகில் இந்த திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வடமாநிலங்களில் முதல் நாளில் ரூ.6.5 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரளாவில் கொச்சி உள்ளிட்ட சில இடங்களில் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி சில திரையரங்குகளில் மட்டும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x