Published : 29 Sep 2017 10:58 AM
Last Updated : 29 Sep 2017 10:58 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் 6-ம் நாளான நேற்று காலை தங்க ஹனுமன் வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி கோதண்ட ராமர் அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகள் நெடுகிலும் பக்தர்கள் ஹாரத்தி எடுத்து சுவாமியை வழிப்பட்டனர்.
வாகன சேவையில் பெரிய, சிறிய ஜீயர் சுவாமிகளின் குழுவினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாடியபடி சென்றனர். மேலும், யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் முன்னே செல்ல, பல மாநில நடன குழுவினர் கோலாட்டம், மயிலாட்டம், பொய் கால் குதிரை ஆட்டம் போன்றவற்றை ஆடியபடி சென்றனர்.
நேற்று மாலை 5 மணிக்கு, புதிய தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட தங்க ரத ஊர்வலத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்தனர். இந்த தங்க ரதத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
யானை வாகனத்தில் மலையப்பர்
தங்க ரத ஊர்வலத்தை தொடர்ந்து இரவு 9 மணிக்கு தங்க யானை வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT