Published : 05 May 2023 04:48 PM
Last Updated : 05 May 2023 04:48 PM

”மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகள் நிறைவேற்றம்; போலீஸ் விசாரணையை முடிக்க விடுங்கள்” - மத்திய அமைச்சர்

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர்

புதுடெல்லி: "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லி போலீஸார் தங்களின் பாரபட்சமில்லாத விசாரணையை முடிக்க வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், "கோபத்துடன் அங்கு போராடிக்கொண்டிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். உங்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீதிமன்றமும் வழிகாட்டி உத்தரவு வழங்கியுள்ளது. முதலில் போலீஸார் தங்களின் பாரபட்சமில்லாத விசாரணையை முடிக்கட்டும். டெல்லி போலீஸார் உண்மையைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

பயிற்சியாளர் மகாவீர் சிங் போகத் எச்சரிக்கை: இதற்கிடையில்,போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, துரோணாச்சாரியார் விருது வென்ற பயிற்சியாளர் மகாவீர் சிங் போகத், வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தனது பதக்கங்களைத் திருப்பித் தரப் போவதாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"இந்த விவாகரத்தில் நீதி கிடைக்கவில்லையென்றால் நான் எனது பதக்கங்களைத் திருப்பிக் கொடுப்பேன். இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்.பி. இது குறித்து அரசாங்கத்துடன் பேசினாரா, கட்சி அளவில் இந்தப் பிரச்சினையை எழுப்பினாரா என்று கேட்ட போது, "இல்லை, அப்படி எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை" என்று பதிலளித்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்பாக பாஜகவில் இணைந்த மகாவீர் சிங் போகத், மல்யுத்த வீராங்கனைகளான பபிதா போகத் மற்றும் கீதா போகதின் தந்தையாவார். கீதா போகத் தனது கணவருடன் வியாழக்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் வீரர்களை சந்திக்க முயன்ற போது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் மகாவீர் போகத், போராட்டத்தில் தீவிரமாக இருந்து வரும் வினேஷ் போகத்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, புதன்கிழமை இரவு டெல்லி போலீஸாருக்கும் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது போலீஸார் தங்களை துஷ்பிரயோகம் செய்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களின் பதக்கங்கள், விருதுகளை அரசாங்கத்திடம் திருப்பித் தரப்போவதாக வியாழக்கிழமை தெரிவித்திருந்தனர்.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x