Published : 05 May 2023 04:08 PM
Last Updated : 05 May 2023 04:08 PM

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை டீசரை நீக்க முன்வந்த தயாரிப்பாளர்; படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

திருவனந்தபுரம்: 'தி கேரள ஸ்டோரி' திரைப்படத்தின் டீசரில் கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த டீசரை நீக்குவதாக படத் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தை திரையிடத் தடைகோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள உயர் நீதிமன்றத்தில் அவற்றின் மீதான விசாரணை நீதிபதிகள் என்.நகரேஷ்,சோஃபி தாமஸ் அடங்கிய அமர்வு முன் இன்று நடந்தது. அப்போது ஆஜரான படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசரை அனைத்து சமூக வலைதள கணக்குகளில் இருந்தும் நீக்குவதாக உறுதியளித்தது. இதனைத் தொடர்ந்து படத்தை திரையிட தடை விதிக்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர். முன்னதாக, நீதிபதிகள் அதற்கான நீண்ட விளக்கத்தையும் தெரிவித்தனர்.

நீதிபதிகள் கூறியதாவது: “இந்தப் படத்தை தயாரித்தவர்கள் இதன் கதை உண்மைச் சம்பவங்களினால் ஊக்குவிக்கப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியமும் சான்றிதழ் வழங்கியுள்ளது.

நாங்கள் சம்பந்தப்பட்ட டீசரைப் பார்த்தோம். அதில் ஒரு குறிப்பிட்டச் சமூகத்திற்கு எதிராக எவ்வித புண்படுத்தலும் இல்லை. இந்தப் படத்திற்கு தடை கோருபவர்கள் யாருமே இன்னும் இப்படத்தை பார்க்கவில்லை என்பது உண்மை. மேலும், தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் கதை புனைவு என்று கூறியுள்ளனர். பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் என்று சில இருக்கின்றன. படத்தை எடுத்தவர்களுக்கு கலைக்கான சுதந்திரம் உள்ளது. அதை நாம் சமன் செய்ய வேண்டும்.

இந்தப் படத்தில் இஸ்லாத்துக்கு எதிராக என்ன இருக்கிறது? ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஐஎஸ்ஐஎஸ் என்ற குறிப்பிட்ட அமைப்புக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒட்டுமொத்த ட்ரெய்லருமே சமூகத்துக்கு எதிராக இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் படம் திரையிடப்படுவதால் எதுவும் நடந்துவிடாது. இந்தப் படத்தின் டீசர் கடந்த நவம்பரிலேயே வெளியாகிவிட்டது. அல்லாதான் கடவுள் என்று படத்தில் வசனம் இருப்பதால் என்ன பிரச்சினை? இந்த தேசம் எல்லோருக்கும் மத சுதந்திரத்தை வழங்கியுள்ளது. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானால் பின்பற்றலாம். அதை பரப்பவும் செய்யலாம்.

ஐஎஸ் போன்ற அமைப்புகளைப் பற்றி ஏற்கெனவே நிறைய திரைப்படங்கள் வந்துவிட்டன. சில படங்களில் இந்துத் துறவிகள், கிறிஸ்துவ பாதிரியார்களின் அடிப்படைவாதம் கூட பேசப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் எழாத சர்ச்சை இப்போது ஏன்? இந்தப் படம் எப்படி சமூகத்தில் மோதலையும், பிரிவினைவாதத்தையும் உருவக்கும்? இது புனைவு என்று கூறப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் எழுந்த நிலையில் டீஸரும் நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. படத்தைத் திரையிடத் தடையில்லை” என்று நீதிபதிகள் கூறினர்.

மனுதாரர்கள் தரப்பில், ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் அப்பாவி மனிதர்களின் மனங்களில் விஷத்தை விதைக்கும் என்றும், லவ் ஜிகாத் என்ற ஒன்றை இதுவரை எந்தப் புலனாய்வு அமைப்பும் உறுதி செய்யவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x