Published : 05 May 2023 02:00 PM
Last Updated : 05 May 2023 02:00 PM

‘பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் தொடர்கிறது...’ - எஸ்சிஓ கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு 

புதுடெல்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு கோவா நகரில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நடந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை வரவேற்ற சில நிமிடங்களில் பயங்கரவாதம் குறித்த தனது கருத்தை இந்தியாவின் அழுத்தமாக முன்வைத்தது.

அந்தக் கூட்டத்தில் யாரையும் குறிப்பிடாமல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: "உலகமே கோவிட் மற்றும் அதன் விளைவுகளை எதிர்கொண்டு வரும் வேளையில், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களும் தடையில்லாமல் தொடர்கின்றன. அதில் இருந்து நமது பார்வையை அகற்றுவது நமது பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமையும். பயங்கரவாதத்தை நியாயப்படுத்த எந்த ஒரு காரணமும் இருக்க முடியாது என்று நாம் நம்புகிறோம். எனவே எல்லை தாண்டிய பங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

உலகளாவிய விநியோக சங்கிலியில் பல்வேறு சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளன. இது உணவு, ஆற்றல் மற்றும் உர விநியோகத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவை வளரும் நாடுகளின் வளர்ச்சியில் முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த சிக்கல்கள், சவால்களை உரிய காலத்தில் திறமையாக நிர்வகிக்கும் உலகளாவிய அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் திறன்களில் உள்ள பற்றாக்குறையை வெளிபடுத்தியுள்ளது.

இருந்தபோதிலும் இந்த சவால்கள் ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள் கூட்டாக இணைந்து அவற்றை எதிர்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது. உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் எஸ்சிஓ நாடுகளில் இருப்பதால் நமது ஒன்றிணைந்த முடிவு நிச்சயம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஆப்கன் மக்களின் நலனை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது முன்னுரிமைகள், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், அனைவரையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை அமைத்தல், பயங்கரவாதம் மற்றும் போதை மருந்து கடத்தலைத் தடுத்தல், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாத்தல் போன்றவைகளில் இருக்க வேண்டும்.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான பலதரப்பட்ட அனுகுமுறைக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும். அது தொடர்பான இந்தியாவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு நண்பனாக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்". இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x