Published : 05 May 2023 05:00 AM
Last Updated : 05 May 2023 05:00 AM
இம்பால்: மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கலவரக் காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் மேதே சமுதாய மக்கள் 53 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய அரசுக்குப் பரிந்துரை அனுப்புமாறு, மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேதே சமூக மக்களின் கோரிக்கைக்கு எம்.பி., எம்எல்ஏ-க்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், மணிப்பூர் மக்கள் தொகையில் 40 சதவீதமாக இருக்கும் நாகா மற்றும் குக்கி பழங்குடிப் பிரிவினர், இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.
மேதே சமுதாய மக்களின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் நேற்று முன்தினம் ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’ நடத்தப்பட்டது.
சுரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தர்பங் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஆயுதம் தாங்கிய கும்பல், மேதே சமூதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதுகுறித்த தகவல் பரவியதால், அண்டை மாவட்டங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேதே சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே பல இடங்களில் ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.
மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. தர்பங் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வன்முறை நீடித்தது.
மாநில போலீஸாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸார் 9 ஆயிரம் பேரை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.
லாங்கோல் பகுதியைச் சேர்ந்த 500 குக்கி சமுதாய மக்கள், லாம்பெல்பெட் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மேதே சமுதாய மக்கள் 1,000-க்கும் மேற்பட்டோர், விஷ்ணுபூர், க்வக்தா, மொய்ராங் ஆகிய மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் வைக்க, வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும், கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தவறான புரிதல் காரணமாக வன்முறை நேரிட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அமைதிகாக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘மணிப்பூரில் இரு சமூக மக்களிடையே ஏற்பட்ட வன்முறை, ஆழ்ந்த வேதனை அளிக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
இம்பால் மேற்கு, கக்சிங், தவுபல், ஜிரிபாம், பிஷன்பூர், சூரசந்த்பூர், கங்கபோக்பி, தேனு கோபால் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட் டுள்ளது.
இதற்கிடையில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்குடன் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வன்முறையைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற அதிரடி படையின் 5 கம்பெனிகளை, விமானம் மூலம் இம்பால் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT