Last Updated : 05 May, 2023 05:50 AM

 

Published : 05 May 2023 05:50 AM
Last Updated : 05 May 2023 05:50 AM

தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அனைத்து கட்சிகளில் உள்ள கர்நாடக தமிழர்கள் கேட்க வேண்டும் - திருமாவளவன் நேர்காணல்

பெங்களூருவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட‌ விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் திமுக, மதிமுக போன்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்றன. ஆனால் நீங்கள் மட்டும் பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறீர்களே?

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் என்னை சந்தித்து பேசினார். அப்போதே, ‘‘நீங்கள் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வேண்டும். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உங்களின் உதவி தேவைப்படுகிறது. கட்சி மேலிடமும் உங்களை எதிர்பார்க்கிறது’’ என்றார். இதையடுத்து டி.கே.சிவகுமாரும் பிரச்சாரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முன்னாள் முதல்வர் சித்தராமையா, தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் எனது பிரச்சாரத்தை விரும்பினர். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களது கருத்தியல் எதிரியான பாஜகவை வீழ்த்துவதற்காகவே இங்கு வந்தேன்.

உங்களுடைய பார்வையில் கர்நாடக தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது? எந்த கட்சி முந்துகிறது?

நான் கர்நாடகா முழுவதும் பயணம் செய்யவில்லை. எனவே முழுமையான நிலவரம் தெரியவில்லை. நான் பெங்களூருவில் காந்தி நகர், சாந்தி நகர், ராஜாஜி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட‌ தொகுதிகளில் பிரச்சாரம் செய்தேன். அதில் காங்கிரஸூக்கு சாதகமான சூழல் இருக்கிறது.

தமிழிலேயே பேசி வாக்கு சேகரிக்கிறீர்கள். உங்களுடைய பிரச்சாரத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

பெங்களூருவில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். நான் சென்ற தொகுதிகளில் தமிழர்களே வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். எனவே வேட்பாளர்களே தமிழில் பேசி, சகஜமாக பழகுகிறார்கள். அதனால் தமிழிலே பேசி வாக்கு சேகரித்தேன்.

எந்தெந்த அம்சங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தீர்கள்?

பாஜக ஆட்சியால் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்திருப்பதை சுட்டிக்காட்டினேன். ஆர்எஸ்எஸ் இந்துத்துவ அரசியல்எவ்வாறு சமூக நீதி, சகோதரத்துவம், ஒருமைப்பாட்டை அழிக்கிறது என்பதை விளக்கினேன். சாந்தி நகர் காங்கிரஸ் வேட்பாளர் ஹாரீஸ், “திருமாவளவன் பேச்சைக் கேட்ட பிறகு மூளையில் ஒருதீப்பொறி உருவாகிவிட்டது. அவர் சொல்வது போல இந்த தேர்தலை கருத்தியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும்'' என மேடையிலே பாராட்டினார்.

காங்கிரஸ் கூட்டணியில் விசிகவுக்கு ஓரிரு தொகுதிகள் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியானதே?

நாங்கள் எதையும் கேட்கவில்லை. பிரச்சாரம் செய்வதற்கு கூட எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால் எங்களது கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பினர். 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் நிறுத்தினர். கட்சியை முழுமையாக கட்டமைக்காமல் தேர்தலை சந்திக்க வேண்டாம். வாக்குகளை பிரித்து காங்கிரஸின் தோல்விக்குகாரணமாக கூடாது என கூறினேன். அதனால் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட்டார்கள். ஆனால் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் இறங்கி இருக்கிறோம். புதிய நிர்வாகிகளையும் இதற்காக நியமித்திருக்கிறேன்.

அப்படியென்றால் எதிர்காலத்தில் விசிக, கர்நாடகாவில் போட்டியிட விரும்புகிறதா?

நிச்சயமாக. எங்களுக்கு கர்நாடகாவில் நல்ல அடித்தளம் இருக்கிறது. தமிழர்களும், தலித்துகளும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இந்த தேர்தலுக்கு பிறகு நடைபெறும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் கூட போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் ஓரிரு தொகுதிகளில் கூட விசிக களமிறங்கலாம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால், 2024 மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறுகிறீர்கள்? எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாத சூழலில் எதன் அடிப்படையில் இதனை கூறுகிறீர்கள்?

பாஜக தென்னிந்தியாவில் காலூன்றுவதற்கு கர்நாடகாவை ஒரு அடித்தளமாக பயன்படுத்துகிறது. இங்குபாஜகவை தோற்கடித்தால் தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் எளிதில் காலூன்ற முடியாது.அதேவேளையில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு நம்பிக்கை ஏற்படும். காங்கிரஸை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கையில் ஓரணியில் திரள்வார்கள். நிதீஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோரும் பாஜகவை வீழ்த்த கைகோத்திருப்பது ஒரு நல்லசமிக்ஞை. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது எளிதாக மாறிவிடும்.

கர்நாடகாவை பொறுத்த வரை காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய மூன்று பிரதான கட்சிகளும் தமிழர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை. இந்த தேர்தலில் கூட காங்கிரஸும், பாஜகவும் தலா ஒருவருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளன. இந்த எண்ணிக்கையை உயர்த்த என்ன செய்யலாம்?

கர்நாடக தமிழர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. இவர்களை முன்னிறுத்தி தமிழர்களே கட்சி தொடங்கி இருக்க வேண்டும். காங்கிரஸ், பாஜக, மஜத போன்ற கட்சிகளில் இருக்கும் தமிழர்கள் கட்சிக்குள் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்குமாறு கட்சி தலைமையை கேட்க வேண்டும். கர்நாடக தமிழ் அரசியல்வாதிகளும் தங்களின் ஆளுமையை வளர்த்துக் கொண்டு, தமிழர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட பாடுபட வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x