Published : 05 May 2023 06:00 AM
Last Updated : 05 May 2023 06:00 AM

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை - பிஹார் அரசு மேல்முறையீடு

பாட்னா: பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக ஜனவரி 7 முதல் 21 வரை இக்கணக்கெடுப்பு நடந்தது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 15 முதல் மே 15 வரை இப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜாதி, குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, ஆண்டு வருமானம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதில் தலையிட மறுத்தஉச்ச நீதிமன்றம், மனுக்களை விரைவில் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவுடன் உயர் நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் இந்த வழக்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நிறுத்தி வைக்கவும் திரட்டப்பட்ட புள்ளி விவரத்தை பாதுகாப்புடன் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பாக பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்று நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என்றுமனுதாரர்கள் கூறுவதில் முகாந்திரம் இருப்பதாக கருதுகிறோம். புள்ளிவிவரங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. இப்பிரச்சினைக்கு மாநில அரசு விரிவான தீர்வு காண வேண்டும். கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் சட்டப்பேரவையில் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என அரசு கூறுவதும் கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் தனிநபரின் அந்தரங்க உரிமை தொடர்பான கேள்வியும் எழுகிறது. இதனை வாழும் உரிமையின் ஒரு அம்சமாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீடு: முன்னதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று காலையில் கூறும்போது, “பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன” என்றார்.

இந்நிலையில் பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிஹார் அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x