Published : 04 May 2023 07:27 PM
Last Updated : 04 May 2023 07:27 PM

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல; போராட்டம் தொடரும்” - மல்யுத்த வீராங்கனைகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல என்றும், தங்களின் போராட்டம் தொடரும் என்றும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்தப் போராட்டம் தனக்கு எதிரானது இல்லை என்றும் பாஜகவுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) வழக்கை முடித்து வைத்தது.

"குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளுடன் நீங்கள் இங்கு வந்தீர்கள். இரண்டு கோரிக்கைகளும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு ஏதாவது நிவாரணம் வேண்டும் என்றால் நீங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட நீதித் துறை நீதிமன்றத்தையோ நாடுங்கள்" என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வழக்கை முடித்து வைப்பதாகவும் அறிவித்தது.

முன்னதாக, வீராங்கனைகளின் புகார் தொடர்பாக ஒய்வு பெற்ற அல்லது பொறுப்பில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வீராங்கனைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தார். எனினும், இதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு பின்னடைவு அல்ல. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன செய்ய முடியுமோ அதனை அது செய்துள்ளது. எங்களின் போராட்டம் தொடரும்" என தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மற்றொரு மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், "அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலிப்போம். மூத்தவர்களின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என தெரிவித்தார்.

பின்புலம்: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 5-ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 23-ம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, "டெல்லி காவல் துறையினரால் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இந்திய அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகளால் எந்த பயனும் இல்லை" என்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். | வாசிக்க > பதக்கங்கள், விருதுகளை திருப்பித் தர தயாராகும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள்: என்ன நடக்கிறது ஜந்தர் மந்தரில்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x