Published : 04 May 2023 01:30 PM
Last Updated : 04 May 2023 01:30 PM

கோவாவில் இன்று கூடுகிறது எஸ்சிஓ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு

கோவா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் இன்று கூட உள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இந்த ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இதை முன்னிட்டு, எஸ்சிஓ அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒருவர் 2011-க்குப் பிறகு இந்தியா வருவது இதுவே முதல் முறை. தனது இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, "எஸ்சிஓ மீதான உறுதிப்பாட்டின் காரணமாகவே இந்த மாநாட்டில் பங்கேற்க முடிவெடுத்துள்ளேன். எனது இந்த பயணத்தின்போது எஸ்சிஓ குறித்தே கவனம் செலுத்தப்படும். நட்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்நோக்கி இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்தியா வரும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை தனித்தனியே சந்தித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எனினும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் அண்டை நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்துவது கடினம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது, உதவி செய்வது, நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக நிற்பது என்ற உறுதிப்பாட்டை இந்தியா ஏற்கனவே அறிவித்து அதன்படி செயல்பட்டு வருிறது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் என்றாவது ஒரு நாள் ஏற்படும் என இந்தியா நம்புகிறது" என தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இந்தியா வந்துள்ள எஸ்சிஓ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜாங் மிங் உடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. எஸ்சிஓ இந்திய தலைமைக்கு அவர் அளித்து வரும் ஆதரவு பாராட்டுக்குரியது. எஸ்சிஓ-வை பாதுகாப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த மாநாட்டில் புத்தாக்க தொழில்நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவம், இளையோர் மேம்பாடு, புத்தமத பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x