Published : 04 May 2023 07:14 AM
Last Updated : 04 May 2023 07:14 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீன் மறுக்கப்பட்ட 2 சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதில், ‘‘திருமண சர்ச்சை வழக்கு ஒன்றில் விசாரணையின் போது கைது செய்யப்படாத போதிலும் கணவர், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரருக்கு லக்னோ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன் ஜாமீன் மறுத்துவிட்டார். அதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு காஸியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. கைது செய்ய வேண்டிய அவசியமில்லாத வழக்குகளில் ஜாமீன் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை செஷன்ஸ் நீதிபதி பின்பற்றவில்லை’’ என்று சித்தார்த் லுத்ரா வாதாடினார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல் மற்றும் அசனுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்து தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
‘‘போலீஸ் காவல் தேவைப்படாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தாராளமாக ஜாமீன் வழங்கலாம். இயந்திரத்தனமாக அவர்களை காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது’’ என்று உச்ச நீதிமன்றம் பல முறை தெளிவாக உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூட, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத நீதிபதிகளிடம் இருந்து பணிகள் திரும்பப் பெறப்படும். அவர்களுடைய திறனை மேம்படுத்த நீதித்துறை அகாடமிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்’’ என்று தெளிவாக எச்சரிக்கப் பட்டிருந்தது.
அப்படி இருந்தும் பல வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க தயக்கம் காட்டுவது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். எனவே, முன் ஜாமீன் மற்றும் ஜாமீன் வழங்க நீதிபதிகளிடம் உள்ள நீதித்துறை பணிகளை திரும்பப் பெற்று அவர்களை அகாடமி அனுப்பி திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் இந்த நாட்டின் சட்டம். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனால், உத்தர பிரதேசத்தில் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நீதிபதிகளை நீதித்துறை அகாடமிக்கு அனுப்பி அவர் களுடைய திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் தேவைப்படாத சூழ்நிலைகளில் கைது செய்வதற்கும், காவலில் வைப்பதற்கும் இடமில்லை. மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான், ஜாமீன் வழங்க தேவையில்லாமல் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அப்போதுதான் அரசுகள் மற்றும் சிபிஐ உட்பட விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சரியான நிலைப்பாட்டை எடுக்க முடியும்.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...