Last Updated : 04 May, 2023 05:13 AM

 

Published : 04 May 2023 05:13 AM
Last Updated : 04 May 2023 05:13 AM

கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் சோதனை - மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில் மரத்தின் கிளையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி ரொக்கப்பணம் சிக்கியது.

மரத்தின் கிளை மீது மறைத்து வைக்கப்பட்டுள்ள பணக்கட்டுகள் அடங்கிய பை.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தலைவர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை ரூ.110 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் 2,346 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மைசூருவில் புத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோக் குமார் ராய் வீடு, அவரது சகோதரர் சுப்பிரமணிய ராயின் வீடு ஆகியவற்றில் சோதனை செய்தனர். இதில் வீட்டுக்குள் பெரிய அளவில் ரொக்கப்பணம் சிக்கவில்லை.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுப்பிரமணிய ராயின் வீட்டின் முன்பாக இருந்த மரத்தில் ஒரு பை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டனர். இதனால் சந்தேகம் ஏற்பட்டதால் அதனை எடுத்து திறந்து பார்த்தன‌ர். அதில் ரூ.500, ரூ.2000 நோட்டுக் கட்டுகள் ரூ. 1 கோடி அளவுக்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தன‌ர்.

அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி ரொக்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளி யாகி வைரலாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x