Published : 03 May 2023 12:32 PM
Last Updated : 03 May 2023 12:32 PM
கொல்கத்தா: பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு எதிராக விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நோட்டீஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரி கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தின் அமைச்சர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. அதில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு எதிராக விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும்.
கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஃபர்கத் ஹக்கிம் கலந்து கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கு உள்ளூர் எம்எல்ஏவான எம்எஸ்எம்இ துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா தலைமை தாங்குவார்.
போராட்டத்தின்போது மத்திய பல்கலைக்கழக அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த புல்டோசர்களை அனுப்பி வைக்கலாம். அப்போதும் யாரும் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது.
பால்ஸ் மற்றும் பிற நாட்டுப்புறக் கலைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். போராட்டத்தில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யவேண்டும். பாடகர் கபீர் சுமான், ஓவியர் சுப்ஹ பிரசன்னா ஆகியோர் மே 6,7 அன்று போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று முதல்வர் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, விஸ்வ பாரதி நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கடந்த வாரத்தில் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
விஸ்வ பாரதி பல்கலைகழகம் நோட்டீஸ்: அமர்த்தியா சென் பயன்படுத்தி வரும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 5,662 சதுர அடி நிலத்தை மே 6-ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் ஏப்ரல் 19-ம் தேதி அமர்த்திய சென்னிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதன் பகுதியில் மத்திய அரசுக்குச் சொந்தமான விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளது. அதே சாந்தி நிகேதன் பகுதியில் தனது தந்தை வாழ்ந்த வீட்டில் நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் வாழ்ந்து வருகிறார். 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் அவரது தந்தைக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. அதை ஒட்டிய 5,662 சதுர அடி நிலமும் அமர்த்தியா சென்னின் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலம் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது என்றும், அதனை அமர்த்தியா சென் ஆக்கிரமித்திருப்பதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அமர்த்தியா சென், 5,662 சதுர அடி நிலம் தனது தந்தையால் வாங்கப்பட்டது என்றும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
கடந்த 1921-ல் ரவீந்தரநாத் தாகூரால் நிறுவப்பட்ட விஸ்வ பாரதி மேற்கு வங்கத்தில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வேந்தராக பிரதமர் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT