Published : 03 May 2023 08:55 AM
Last Updated : 03 May 2023 08:55 AM
புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் உள்ள யோல் கன்டோன்மென்ட்டை கலைப்பதற்கான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 62 கன்டோன்மென்ட்களை ஒழிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அனைத்து கன்டோன்மென்ட்களிலும் ராணுவப் பகுதியை தனியாக பிரித்து அவற்றை பிரத்யேக ராணுவ நிலையங்களாக மாற்றுவதும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை உள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதும் மத்திய அரசின் திட்டமாக உள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு ராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக கன்டோன்மென்ட் என்ற கருத்தாக்கத்தில் இருந்து ராணுவம் விலகிச் சென்றது. கன்டோன்மென்ட் பகுதிகளில் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இதுவரை 237 ராணுவ நிலையங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதிய கன்டோன்மென்ட் பிரிப்பு திட்டம் ஏற்கெனவே யோலில் முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஏப்ரல் 27-ல் வெளியிட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ராணுவப் பகுதியும் சிவிலியன் பகுதியும் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட கன்டோன்மென்ட்களில் இந்த எல்லை வரையறைபணி எளிதாக இருக்கும். மற்ற கன்டோன்மென்ட்களில் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். கன்டோன்மென்ட்களில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சிகள் மூலம் அந்தந்த மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இனி அவர்களுக்கு அந்த நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.
இதுபோல் கன்டோன்மென்ட்களில் இருந்து பிரிக்கப்பட்ட ராணுவ நிலையங்களின் வளர்ச்சியில் ராணுவம் முழு கவனம் செலுத்த முடியும். பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT