Published : 03 May 2023 08:28 AM
Last Updated : 03 May 2023 08:28 AM
திருமலை: மாதம் ஒருநாள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்று திருமலை முழுவதும் சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் ஒப்பந்த சுகாதார தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்தவித நோட்டீஸும் வழங்காமல் திடீர் என வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் என்றும் மாற்று நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்கிறோம் என்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா, எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது. பின்னர், அடிமட்ட ஊழியர் முதற்கொண்டு உயர் தேவஸ்தான, அரசு அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவகர்கள், ஊடக நண்பர்கள் என அனைவரும் திருமலையை சுத்தமாக வைத்துக்கொள்ள களம் இறங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் பேரில் கடந்த 2 நாட்களாக மாவட்ட ஆட்சியர், இணை ஆட்சியர், தேவஸ்தான நிர்வாக அதிகாரி, இணை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அனைத்து தேவஸ்தான துறை அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் திருமலையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதற்கு ‘சுந்தர திருமலை - சுத்தமான திருமலை’ என பெயர் சூட்டப்பட்டது. இதில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு திருமலையின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்தனர். இதைக் கண்டபக்தர்களும் தாமாக முன்வந்து சாலைகளை சுத்தம் செய்தனர். இதற்கிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் நேற்று வேலைக்கு திரும்பியதாக தர்மா ரெட்டி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் அரசு அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருமலையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். அதன்படி வரும் 13-ம் தேதி ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்தில் 500 ஊழியர்களும், அலிபிரி நடைபாதையில் 1,000 ஊழியர்களும் தொடர்ந்து 4 மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என தர்மா ரெட்டி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT