

ஸ்ரீநகர்: தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக காஷ்மீரின் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பல்வேறு நபர்களுக்கு சம்பந்தம் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீநகர், அவந்திபோரா, புல்வாமா, குல்காம் மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது இசாக் அகமது பட் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இவர் ஸ்ரீநகர் சோஸெய்த் பகுதியைச் சேர்ந்தவர். அவரிடம் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அகமதுவின் தந்தை முகமது ரம்ஸான் பட் கூறுகையில், “காலை 6 மணியளவில் வந்த என்ஐஏ அதிகாரிகள் இஷாக் குறித்த தகவல்களைக் கேட்டனர். பின்னர் அவரது மொபைல் போனை எடுத்துச் சென்றனர். படிப்பறிவில்லாத அகமது ஜன்னல்களுக்கு கண்ணாடி பொருத்தும் வேலை செய்து வருகிறார்’’ என்றார்.