Published : 02 May 2023 06:47 PM
Last Updated : 02 May 2023 06:47 PM

பஜ்ரங் தளம் விவகாரம் | “முன்பு ராமர் பிரச்சினை; இப்போது ஹனுமன்...” - காங். மீது பிரதமர் மோடி விமர்சனம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெகுவாக விமர்சித்துள்ளார். “வாரன்டி இல்லாத பொருளுக்கு வழங்கப்படும் கேரன்டி போன்றது காங்கிரஸின் வாக்குறுதிகள்” என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.

கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலத்தில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், ஹோஸ்பேட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "காங்கிரஸ் கட்சிக்கு முன்பு ராமர் பிரச்சினையாக இருந்தார். இப்போது அவர்கள் ஹனுமனை பிரச்சினையாக்கி தேர்தல் அறிக்கையில் அடைத்துள்ளனர். அதனால்தான் பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். நான் இன்று ஹனுமனின் பூமியின் காலடி எடுத்துவைத்த அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் துரதிர்ஷ்டவசமான அறிவிப்பைக் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. அவர்களுக்கு ஜெக் பஜ்ரங்பலி என்று சொல்வோர் இப்போது பிரச்சினையாகத் தெரிகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் பரிந்து பேசும். அதனால்தான் தேசத்தின் மைல்கல்லான துல்லியத் தாக்குதல்களை கேள்விக்குள்ளாக்கியது. நாட்டின் பாதுகாப்பு துறையை கேள்விக்குள்ளாக்கும் வரலாறு கொண்ட கட்சி காங்கிரஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் கண்ணீர் விட்டனர். மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிற்கின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் காங்கிரஸும், ஜே.டி.எஸ்.ஸும் வெவ்வேறு கட்சிகளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவை ஒன்றுதான். இரண்டு கட்சிகளும் குடும்ப அரசியலையும் ஊழலையும் செய்கின்றன.

ஒரு தொழிற்சாலை ஒரு பொருளை தயாரிக்கும்போது அதன் வாரன்டி பற்றி குறிப்பிடப்படுவது வழக்கம். வாரன்டி முடிந்துவிட்டால் அதற்கு அந்தத் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பாகாது. அதேபோல் காங்கிரஸின் வாரன்டி முடிந்துவிட்டது. காங்கிரஸ் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்நிலையில், அதைச் செய்வோம்; இதைச் செய்வோம் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் வாரன்டி இல்லாதவர்கள் கொடுக்கும் கேரன்டி. எல்லாம் பொய் மட்டுமே" என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக, கர்நாடகாவில் ஊழலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி ஏன் பேசுவதே இல்லை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். | வாசிக்க > “கர்நாடகாவில் ஊழல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்?” - ராகுல் காந்தி கேள்வி

இதனிடையே, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மகளிருக்கு மாதம் ரூ.2000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் முழு விவரம்: கர்நாடக தேர்தல் | மகளிர்க்கு மாதம் ரூ.2000 முதல் பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு தடை வரை.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

இந்த தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, ‘பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடை போன்ற காங்கிரஸ் வாக்குறுதிகள் முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி’ என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் விவரம்: ‘முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி’ - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீது பாஜக தாக்கு

224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் கர்நாடகாவில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x