Published : 02 May 2023 08:02 AM
Last Updated : 02 May 2023 08:02 AM
அமராவதி: மறைந்த பழம்பெரும் நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இவ்விழாவில் ரஜினிகாந்த் தனக்கும் என்.டி.ஆருக்கும் இருந்த பல வருட நட்பை, அன்பை வெளிப்படுத்தி பேசினார். மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்.டி.ஆரின் மகனும் இந்துபூர் எம்எல்ஏவுமான நடிகர் பால கிருஷ்ணா ஆகியோரையும் ரஜினி புகழ்ந்து பேசினார்.
ஆந்திராவில் இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் ரஜினி இவ்வாறு புகழ்ந்து பேசியதை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் ரஜினியை விமர்சித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த நடிகை ரோஜாவும் விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு நேற்று கூறியதாவது:
என்.டி.ராமாராவ் மீது கொண்ட அன்பால்தான் ரஜினி அந்த விழாவுக்கு வர ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு இருந்தும் அதனை தவிர்த்து இவ்விழாவில் கலந்துகொண்டார். இது, என்.டி.ஆர் மீது ரஜினிக்கு உள்ள மரியாதையை காட்டுகிறது. மேலும் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஜெகன் கட்சி குறித்து அவர் பேசவில்லை. ஆனால் ஆளும் கட்சியினர் பதவி கர்வத்தால் ரஜினியை விமர்சிக்கின்றனர். ரஜினி ஒரு மாபெரும் நடிகர். அதையும் தாண்டி அவர் நல்ல மனிதர். அவரை தரக்குறைவாக விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இதை தெலுங்கு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ரஜினி குறித்து பேசியவர்கள் தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT