Published : 02 May 2023 08:07 AM
Last Updated : 02 May 2023 08:07 AM

காஷ்மீரில் ஜி20 கூட்டத்துக்கு பாதுகாப்பு: ட்ரோன் எதிர்ப்பு சிறப்பு படை அனுப்புகிறது மத்திய அரசு

கோப்புப்படம்

புதுடெல்லி: ஜி20 அமைப்புக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா தலைமை ஏற்றது. இதையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜி20 பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் சுற்றுலா தொடர்பான கூட்டம் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் தீவிர வாதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தினர். இதில் 5 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஜி20 மாநாடு நடைபெறவுள்ளதால் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக ட்ரோன்கள் எதிர்ப்பு தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறப்புப் படை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தீவிரவாதிகள் வாகனத்தில் வெடிபொருட்களை வைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் ஜி20 கூட்டம் நடைபெற இருப்பதாலும் அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதாலும், நெடுஞ்சாலையில் புதிய பாதுகாப்பு திட்டத்தை வகுத்துள்ளோம்” என்றார்.

30 தீவிரவாதிகள்..

காஷ்மீர் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் விஜய் குமார் கூறும்போது, “காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இப்போது 30 தீவிரவாதிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது இதற்கு முன்பிருந்ததைவிட மிகவும் குறைவு ஆகும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x