Published : 01 May 2023 06:23 PM
Last Updated : 01 May 2023 06:23 PM

“கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் உங்களைப் பற்றியே ஏன் பேசுகிறீர்கள்?” - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

ராகுல் காந்தி | கோப்புப்படம்

துருவேகெரே (கர்நாடகா): கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் கர்நாடக மக்களின் எதிர்காலத்திற்கானது; நரேந்திர மோடிக்கானது அல்ல என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதனை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசினார். ராகுல் காந்தியின் உரை விவரம்: "கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த நீங்கள் (நரேந்திர மோடி), கர்நாடகா பற்றி பேசவில்லை. உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது குறித்து பேசி இருக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்குள்ள இளைஞர்களுக்காக, கல்விக்காக , சுகாதாரத்திற்காக, ஊழலுக்கு எதிராக என்ன செய்யப்போகிறீகள் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

இந்த தேர்தல் கர்நாடக மக்களின் எதிர்காலத்திற்கானது; உங்களுக்கானது அல்ல. காங்கிரஸ் கட்சி உங்களை 91 முறை அவமதித்தாகக் கூறுகிறீர்கள். ஆனால் கர்நாடகாவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது குறித்து பேசவே இல்லை. அடுத்த முறையாவது, நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பது குறித்து பேசுங்கள்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, மாநிலத் தலைவர்களைப் பற்றி பேசுகிறோம். ஆனால், நீங்கள்(நரேந்திர மோடி) இங்கு வரும்போதெல்லாம் உங்கள் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குறித்தோ, எடியூரப்பா குறித்தோ பேசுவதில்லை. உங்கள் பேச்சு முழுமையாக உங்களைப் பற்றியே இருக்கிறது. பசவராஜ் பொம்மை பெயரையும், எடியூரப்பா பெயரையும் இரண்டொரு முறையாவது குறிப்பிடுங்கள். அவர்களும் சந்தோஷப்படுவார்கள்.

பாஜகவின் ஆட்சியில் கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் பெருகிவிட்டது. அரசால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 40 சதவீதம் கமிஷன் பெறப்பட்டுள்ளது. சாமானியர்கள் மற்றும் ஏழை மக்களின் பைகளில் இருந்து பாஜகவினர் பணத்தை எடுத்துள்ளனர். இந்த 40 சதவீத ஊழல் பற்றி பிரதமருக்குத் தெரியாது என்பது உண்மையல்ல. அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்கும். தெரிந்தும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏன்? இது பற்றி நரேந்திர மோடி, கர்நாடக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அதேபோல, கர்நாடகா, தனது நியாயமான பங்கு வரிப்பணத்தை பெற பிரதமர் மோடி என்ன செய்தார்? வெள்ளத்தின்போது கர்நாடக மக்களுக்கு அவர் எவ்வாறு உதவினார்? கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையில் நிலவும் தண்ணீர் பிரச்சினையைத் தீக்க அவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? இவை குறித்தும் பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். முன்னதாக, "கடந்த சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை விஷப்பாம்பு எனக் கூறியது பற்றி பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை தன்னை 91 முறை அவமதித்து இருப்பதாக தெரிவித்திருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x