Published : 01 May 2023 02:19 PM
Last Updated : 01 May 2023 02:19 PM
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவரப்படும், அனைத்து அரசு பள்ளிகளும் நவீனப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், தென்னிந்தியாவில் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் பல வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக திங்கள்கிழமை வெளியிட்டது. ‘பிரஜா பிராணாலிகே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கையினை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம், உற்பத்தி துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், பெங்களூருவை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
> மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் வருடத்திற்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த சிலிண்டர்கள், உகாதி, விநாயர்கர் சதூர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளின் மாதங்களில் வழங்கப்படும்.
> ‘அடல் ஆஹார் கேந்திரா’ - இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் ஒரு கேண்டின் அமைத்து மலிவு விலையில் சத்தான உணவு வழங்கப்படும்.
> ‘போஷ்னே திட்டம் மூலம் மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் அரை லிட்டர் நந்தினி பால் இலவசமாக வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரசி மற்றும் 5 கிலோ சிறுதானியம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
> மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்த உடன் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
>‘சர்வார்கு சுரு யோஜனா’ - திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் நவீனப்படுத்தப்படும்.
> யுபிஎஸ்சி, வங்கித் தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தயாரகும் நபர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
> பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் வாழ்வை எளிமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் பெங்களூரு நகரம் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதிகள் அளித்துள்ளன.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி. நட்டா,"கர்நாடகாவைப் பொறுத்த வரை பாஜகவின் பார்வை என்பது அனைவருக்கும் ஒரேமாதிரியான நீதி என்பதே" என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT