Published : 01 May 2023 11:54 AM
Last Updated : 01 May 2023 11:54 AM
ஷிமோகா: காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் கர்நாடக மக்கள் ஒன்றிணைய வேண்டும்; இல்லாவிட்டால் அது எதிர்கால தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஷிமோகா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு ஏற்ப கர்நாடக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால் அது எதிர்கால தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில்தான் கர்நாடகத்தில் ஏராளமான கல்வி நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. தொடக்கப்பள்ளிகள் முதல், உயர்நிலைப் பள்ளிகள், ஐடிஐ, ஐஐஎஸ், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் வரை ஏற்படுத்தியது காங்கிரஸ்தான். பாஜக என்ன செய்தது? அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான அரசு பள்ளிகள் மூடப்பட்டன. தனியாருக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டார்கள்.
நாட்டின் ஜனநாயகத்திற்காக காந்திஜியும் நேருஜியும் அளித்த பங்களிப்பை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால், தற்போது சிலர் இருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக எந்த பங்களிப்பையும் வழங்காமல், அவர்கள் தங்களைத் தாங்களே சிறந்த நாட்டுப்பற்றாளர்களாகவும், தேசியவாதிகளாகவும் கூறிக்கொள்கிறார்கள்.
நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்தது; வலுப்பத்தியது காங்கிரஸ் கட்சிதான். அதன் பலனைத்தான் தற்போது பலரும் அனுபவித்து வருகிறார்கள். நரேந்திர மோடி பிரதமராக ஆக முடிந்ததும் அதனால்தான். இல்லாவிட்டால், அண்டை நாடுகளில் உள்ளதுபோல் இங்கும் சர்வாதிகார ஆட்சிமுறைதான் இருந்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT