Published : 01 May 2023 06:48 AM
Last Updated : 01 May 2023 06:48 AM

மத பிரிவினைவாதத்தை தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’: முதல்வர் பினராயி கடும் கண்டனம்

பினராயி விஜயன், தி கேரளா ஸ்டோரி போஸ்டர்

திருவனந்தபுரம்: சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி' இந்தித் திரைப்படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கேரள மாநிலத்தை சேர்ந்த 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அதில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படம் மே-5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்துக்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியுள்ளதாவது: மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் டிரைலர் அமைந்துள்ளது. சங் பரிவாரின் கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இது என்பதை, டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது.

கேரள மாநில தேர்தலின்போது அரசியலில் ஆதாயம் அடைய சங் பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘‘லவ் ஜிஹாத்’’ குற்றச்சாட்டுகளை படத்தில் வடிவமைத்தது திட்டமிட்ட சதி நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஆனால் சமீபத்தில் லவ் ஜிஹாத் என்ற ஒன்றே கிடையாது என்று மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இப்படியான சூழலில் கேரளாவில் மதநல்லிணக்க சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x