Published : 29 Apr 2023 01:44 PM
Last Updated : 29 Apr 2023 01:44 PM

ஆந்திராவில் அதிர்ச்சி: 2 நாட்களில் 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை

பிரதிநிதித்துவப்படம்

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தில் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால், கடந்த இரண்டு நாட்களில் 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் 10 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதி இருந்தனர். இந்தநிலையில், அம்மாநிலத் தேர்வு வாரியம் புதன்கிழமை 11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், 11-ம் வகுப்பில் 61 சதவீத மாணவர்களும், 12-ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் இரண்டு நாட்களில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்த தகவலின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டம், தண்டு கோபாலபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், பிளஸ் 1 தேர்வில் பல பாடங்களில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

விசாகப்பட்டிணம் மாவட்டம், திரிநாதபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, பிளஸ் 1 தேர்வில் சில பாடங்களில் தோல்வியடைந்ததால் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதேபோல், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், அனகாபள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பிளஸ் 1 தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியாவின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திர சூட், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். மேலும், மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் பிரச்சினையில் நமது கல்வி நிறுவனங்கள் எந்த இடத்தில் தவறு செய்கின்றன என்று தாம் யோசிப்பதாக தெரிவித்திருந்தார்.

| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x