Published : 29 Apr 2023 11:20 AM
Last Updated : 29 Apr 2023 11:20 AM
பெங்களூரு: கர்நாடகாவில் 40 சதவீத ஊழலில் திளைத்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடகாவில் வருகிற மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 4 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று குல்பர்கா, பெல்லாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் உரையாற்றினார்.
குல்பர்காவில் கொட்டும் மழையில் நனைந்தவாறே ராகுல் காந்தி பேசியதாவது: கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக பாஜக ஆட்சி மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அரசின் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் வாங்கியுள்ளனர். இதனை தர மறுத்த ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
40 சதவீத ஊழலில் திளைத்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் 40 இடங்களே கிடைக்கும். காங்கிரஸூக்கு 150 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரமும், டிப்ளமோ பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT