Published : 11 Sep 2017 09:35 AM
Last Updated : 11 Sep 2017 09:35 AM
கர்நாடக மாநிலத்தில் வங்கி தேர்வு எழுத சென்ற ஆந்திர மாநில மாணவ, மாணவிகளை கன்னட அமைப்பினர் தேர்வு எழுத விடாமல் தடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹுப்ளி, குல்பர்கா, சித்ரதுர்கா உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை வங்கி தேர்வுகள் நடைபெறுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல மாணவ, மாணவிகள் தேர்வு எழுத சென்றனர். ஆனால் ஹுப்ளியில் சனிக் கிழமை தேர்வு எழுத சென்ற தெலுங்கு மாணவ, மாணவிகளை சில கன்னட அமைப்பினர் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் எழுதிய தாள்களை கிழித்து எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. போலீஸார் தலையிட்டு கன்னட அமைப்பினரை அப்புறப்படுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தெலுங்கு மாணவர்கள் எழுதும் தேர்வில் குறுக்கிட்டு விடைத்தாள்களை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்தது மிகவும் கண்டனத்துக்குரியது. இதேபோன்று, கன்னடர்கள், ஆந்திரா வந்து தேசிய அளவிலான தேர்வுகள் எழுதும்பொழுது சிலர் தடுத்தால் அதனை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இதனை கன்னட அமைப்பினர் புரிந்து செயல்பட வேண்டும். தெலுங்கு மாணவர்களுக்கு கர்நாடக அரசு உரிய போலீஸ் பாதுகாப்பு அளித்திட வேண்டும். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியபோது, ஆந்திராவில் வேலைவாய்ப்பு இல்லாததால் வேறு மாநிலங்களுக்கு இளைஞர்கள் வேலைதேடி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மாணவர்கள் பிரச்சினைக்கு கர்நாடக அரசு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT