Published : 29 Apr 2023 06:45 AM
Last Updated : 29 Apr 2023 06:45 AM
முசாபர் நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் மே 4 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மதுரா, பிரோசாபாத், ஆக்ரா ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற ஆதித்யநாத் பேசியதாவது.
மதுரா நகரம் மிகவும் புனிதமானது. முன்பு இந்த நகரம் பால் ஆறுகள் என்று பிரபலமாக அறியப்பட்டது. அதனால் மதுரா நகரில் இனிமேல் இறைச்சி, மது விற்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு வரை இந்த நகரில் இறைச்சி, மது விற்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை விற்க தடை கொண்டு வரப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக சிலர் அவற்றை விற்கின்றனர். அவர்கள் மில்க் ஷேக், காய்கறி விற்க வேண்டும். இந்த நகரத்தின் புனிதத்தை காக்க வேண்டும். இந்த அரசு யாருக்கும் பாரபட்சம் பார்க்காது.
உ.பி.யில் பல இடங்களில் முன்பு துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு மக்கள் திரிந்தனர். வழிப்பறியில் ஈடுபட்டனர். தற்போது பாஜக ஆட்சியில் ‘டேப்லெட்’களை சுமந்து செல்கின்றனர். உ.பியில் 2 கோடி மாணவர்களுக்கு டேப்லெட்டுகள் விநியோகித்துள்ளோம். மாநில அரசும் மத்திய அரசும் இரட்டை இன்ஜின்களாக இணைந்து உ.பி.யை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து 3 இன்ஜின்கள் கொண்ட நிர்வாகத்தை மக்கள் கொண்டு வரவேண்டும்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரம் குப்பைகள் நிறைந்ததாக இருந்தது. இப்போது தூய்மை நகரமாகி இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டிகள் நிறைந்த மாநிலமாக உ.பி. மாறி வருகிறது. ஆக்ராவின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளது. புதிய விமான நிலையங்கள், ஐஐடி.க்கள், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளன. காசி, அயோத்தி, கேதார்நாத் என பல இடங்கள் புத்துணர்வு பெற்றுள்ளன. இதுதான் புதிய இந்தியா. இவ்வாறு முதல்வர் ஆதித்யநாத் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT