Published : 29 Apr 2023 04:55 AM
Last Updated : 29 Apr 2023 04:55 AM

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு: குடியரசுத் தலைவர் ஜூன் 5-ல் சென்னை வருகை

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, சென்னை கிண்டி, கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறும், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, வரும் ஜூன் 5-ம் தேதி சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் பங்கேற்கிறார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 51,429 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை துறைகள்

தமிழக மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் - இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மருத்துவமனையை திறந்து வைப்பதற்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்கவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்க முடிவெடுக்கப்பட்டது.

முதல்வர் டெல்லி பயணம்

இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லிசெல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்தார்.

இந்த நிலையில், அவர் செல்லஇருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக முதல்வர் சுமார் ஒன்றரை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது.

அதனால் முதல்வரின் டெல்லிபயணம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.

28-ம் தேதி (நேற்று) அதிகாலை 6 மணிக்கு விமானம் மூலம்முதல்வர் டெல்லி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் வரவேற்பு

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட எம்.பி.க்கள் வரவேற்றனர்.

பின்னர், காலை 10.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

முதல்வரின் அழைப்பை ஏற்று, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வரும் ஜூன் 5-ம் தேதி சென்னை கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கவும், தொடர்ந்து, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளமுன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்கவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு, சென்னை திரும்புவதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார்.

நிதி அமைச்சருடன் சந்திப்பு

அப்போது, மகாராஷ்டிரா செல்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அங்கு வந்தார்.

விஐபிக்கள் ஓய்வு பகுதியில் முதல்வர் ஸ்டாலினும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது. பின்னர், முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் சென்னை திரும்பினார்.

குடியரசுத் தலைவருக்கு நன்றி

குடியரசுத் தலைவர் உடனான சந்திப்புக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ஜூன் 5-ம் தேதி கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கவும், அதே நாளில் சென்னை நந்தனத்தில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் எனதுஅழைப்பை ஏற்றுக் கொண்டதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x