Published : 29 Apr 2023 09:08 AM
Last Updated : 29 Apr 2023 09:08 AM
பெங்களூரு: கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக அமைச்சர் சோமண்ணா வருணா மற்றும் சாம்ராஜ் நகர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் சோமண்ணா அங்கு பலகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே சாம்ராஜ் நகரில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மல்லிகார்ஜூன சாமியை வேட்பாளராக நிறுத்தியதால் சோமண்ணா அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் அவரும் லிங்காயத்து வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய சாதி ஓட்டுகள் சிதறும் என சோமண்ணா கவலை அடைந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சோமண்ணா மஜத வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமியுடன் செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி கர்நாடக தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், 'நீங்கள் என்னுடைய நண்பர் இல்லையா? யாரோ தூண்டி விட்டதால் எனக்கு எதிராக போட்டியிடுகிறீர்கள்.
முதலில் வேட்பு மனுவை திரும்ப பெறுங்கள். உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுக்கிறேன். அடுத்து பாஜக ஆட்சிதான் அமைய உள்ளது. கார் வேண்டுமானால் வாங்கி கொடுக்கிறேன். கேட்கும் பணத்தை வீட்டுக்கு கொடுத்து அனுப்புகிறேன்'' என கூறுகிறார்.
அதற்கு மல்லிகார்ஜூன சாமி, "யாரும் என்னை தூண்டிவிட வில்லை. இப்போது மனுவை திரும்பப் பெற வாய்ப்பு இல்லை. நான் உங்களுடைய ஆள் என்பதால், உங்களின் விருப்பப்படியே நடப்பேன். அடுத்த முதல்வர் நீங்கள் தான் அண்ணா'' என பதிலளிக்கிறார். இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக மஜதவினரும், காங்கிரஸாரும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல் ஆணையர் மனோஜ்குமார் மீனா கூறுகையில், “அமைச்சர் சோமண்ணா பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக புகார்வந்துள்ளது. ஆனால் மஜத வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமி எந்த புகாரையும் அளிக்கவில்லை. அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து, உரிய ஆதாரங்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுப் போம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT