Published : 29 Apr 2023 08:57 AM
Last Updated : 29 Apr 2023 08:57 AM

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா: சந்திரபாபு நாயுடு தேநீர் விருந்தில் ரஜினி பங்கேற்பு!

என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த். உடன் நடிகர் பாலகிருஷ்ணா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: புகழ்பெற்ற நடிகர் என்.டி.ராமா ராவின் 100-வது பிறந்தநாள் வரும் மே மாதம் 28-ம் தேதி வர உள்ளது. இதையொட்டி, அவரது நூற்றாண்டு விழாவை ஏப்ரல் 28-ம் தேதி முதல் உலகம் முழுவதும் 100 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இதன் தொடக்க விழா நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்தும், முக்கிய விருந்தினராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான பால கிருஷ்ணா உட்பட என்.டி.ஆரின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும், திரை, அரசியல், தொழில்துறை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் விஜயவாடா கன்னாவரம் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவரை நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் விழா குழு நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பாலகிருஷ்ணாவும் ரஜினிகாந்தும் ஒரே காரில் நட்சத்திர விடுதிக்கு சென்றனர். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர், ரஜினிகாந்த் மாலை உண்டவல்லி பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் அழைப்பின் பேரில் தேநீர் விருந்துக்கு சென்றார். நடிகர் பாலகிருஷ்ணாவும், என்.டி.ஆரின் குடும்ப உறுப்பினர்களும் அந்த விருந்தில் பங்கேற்றனர்.

ரஜினிகாந்தை சந்திரபாபு நாயுடு மிகுந்த உற்சாகத்துடன் பூச்செண்டு கொடுத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தேநீர் விருந்துக்கு பின்னர், அங்கிருந்து அனைவரும் விழா அரங்கிற்கு சென்றனர். என்.டி.ஆர் குறித்த 2 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில், என்.டி.ஆரின் ரசிகர்கள், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x