Published : 28 Apr 2023 05:20 AM
Last Updated : 28 Apr 2023 05:20 AM
புதுடெல்லி: திமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்க பாஜகவிடம் அதிமுக இணக்கம் காட்டியதாகத் தெரிகிறது.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.இந்த சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். அமித் ஷாவின் அழைப்பின்பேரில் அவர் பங்கேற்றிருக்கிறார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்று இந்த சந்திப்பு இருந்தது. அதாவது அமித்ஷாவுடனான சந்திப்பில் பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார்.
அதிமுக தரப்பில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் இருந்தனர்.
சந்திப்பு குறித்து ‘இந்து தமிழ்திசை’ நாளேட்டுக்கு இரண்டு கட்சிகளின் தலைவர்கள் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
சுமார் 40 நாட்களுக்கு முன்புதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இடையே கருத்துமோதல் ஏற்பட்டது. இதனால், அதிமுக, பாஜக கூட்டணி தொடர்வது கேள்விக்குறியானது. இந்த சூழலில் இருவரையும் ஒன்றாக அமரவைத்து பேசிய அமைச்சர் அமித் ஷா, இணக்கத்துக்கு வழிவகுத்துள்ளார். இதேபோல திமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்க பாஜகவிடம் அதிமுகவும் இணக்கம் காட்டியதாகத் தெரிகிறது.
கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் 32 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. இதற்கு டிடிவி தினகரன் கட்சி உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக கூறப்பட்டன. வரும் தேர்தலில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பினரை சேர்க்க முயற்சி செய்யுமாறு அதிமுக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுரை கூறினார்.
திமுகவை எதிர்க்கும்போது எந்த வகையிலும் அதிமுகவுக்கான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதை அமித் ஷா வலியுறுத்தியதாகவும், முந்தைய தேர்தலில் தினகரனின் வாக்குகள் பிரிந்ததால் அதிமுக வாக்குகள் இழக்க நேர்ந்ததை சுட்டிக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக அதிருப்தியாளர்கள் பிரச்சினையில் தேர்தலுக்கு நெருக்கமாக முடிவு எடுக்கலாம் என பழனிசாமி பதிலளித்துள்ளார். அதிமுக அதிருப்தியாளர்களை எதிர்கொள்ள ஒரு திட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரு கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் அமித் ஷா சில அறிவுரைகளை கூறியுள்ளார். தனித்து போட்டிஎனும் கருத்தை கைவிடும்படி அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து திமுகவுக்கு எதிரான வியூகங்களை வகுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆளும் திமுக அரசின் மீதான ஊழல் புகார்களை வலுவாக எழுப்ப முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
தனித்துப் போட்டி எனும் கருத்தை கைவிடும்படி அண்ணாமலைக்கு அமித் ஷா அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT