Published : 28 Apr 2023 05:12 AM
Last Updated : 28 Apr 2023 05:12 AM
அகமதாபாத்: குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி' சமூகத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து பிஹார் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீது குஜராத்தின் அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் தேஜஸ்வியாதவ் கூறும்போது, “மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர். எல்ஐசி, வங்கிப் பணத்தை மோசடி செய்தால் மத்தியஅரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பாஜக ஆட்சியில் சிபிஐ கூண்டுக்கிளி போல உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரேஷ்மேத்தா, குஜராத்தின் அகமதாபாத் நீதிமன்றத்தில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதுஅவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய தண்டனை சட்டம்499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
“ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் மோசடிக்காரர்கள் என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தொடர்ச்சியாக குஜராத் மக்களை அவமதித்து வருகிறார். துணை முதல்வர் பதவியில் இருப்பவர் இவ்வாறு பேசுவது அழகல்ல. அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஹரேஷ் மேத்தா தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு மே 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. அப்போது தேஜஸ்வி யாதவுக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT