Published : 28 Apr 2023 05:30 AM
Last Updated : 28 Apr 2023 05:30 AM

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து 1,100 இந்தியர்கள் மீட்பு

சூடானில் இருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து இந்திய விமானப் படையின் விமானம் மூலம் நேற்று முன்தினம் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெட்டாவில் முகாமிட்டுள்ள மத்திய இணையமைச்சர் முரளிதரன், அவர்களை வழியனுப்பி வைத்தார்.படம்: பிடிஐ

புதுடெல்லி: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து இதுவரை 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ தலைமை தளபதி அப்துல் பதா அல்-புக்ரான் அதிபராகவும் ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவபடையின் தலைவர் முகமது ஹம்தான் டகாலோ துணை அதிபராகவும் பதவி வகிக்கின்றனர்.

இந்த சூழலில் சூடான் அதிபருக்கும் துணை அதிபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்திருக்கிறது. கடந்த 14-ம் தேதி முதல் ராணுவமும் ஆர்எஸ்எப் படையும் கடும்சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக சூடான் முழுவதும் இதுவரை 460 பேர் உயிரிழந்துள்ளனர். 4,000-க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சூடானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3,500 இந்தியர்களும், சுமார் 1,000 இந்திய வம்சாவளியினரும் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு 'ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு சவுதிஅரேபியா, பிரான்ஸ் நாடுகள் மேற்கொண்ட மீட்புப் பணியின்போது இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இந்திய கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் சுமேதா, ஐஎன்எஸ் டெக்,ஐஎன்எஸ் தார்கேஷ் ஆகிய 3 கப்பல்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. சூடானின் போர்ட்சூடான் துறைமுகத்தில் இருந்து 3 கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து இந்திய விமானப் படை விமானம் மற்றும் பயணிகள் விமானம் மூலம் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இந்தியர்கள் திரும்பி வருகின்றனர்.

அந்த வகையில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து நேற்று முன்தினம் 367 பேர், பயணிகள் விமானத்தில் தலைநகர் டெல்லி திரும்பினர். இதைத் தொடர்ந்து ஜெட்டாவில் இருந்து இந்திய விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் 246 இந்தியர்கள் நேற்று மும்பை வந்தடைந்தனர்.

ஜெட்டாவில் முரளிதரன்: மத்திய வெளியுறவுத் துறைஇணையமைச்சர் முரளிதரன் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில்முகாமிட்டு மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அவர்ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் இதுவரை 6 இந்திய குழுக்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவை வந்தடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக சூடானில் இருந்து 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத் துறைசெயலாளர் வினய் குவாத்ரா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “சூடானில் தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

மீட்புப் பணியில் பெண் விமானி: சூடானில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள், விமானப் படையின் சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்த விமானத்தை பெண் விமானி ஹர்ராஜ் கவுர் போபாரி இயக்குகிறார். இரவு, பகலாக அவர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக விமானப் படை வட்டாரங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x