Published : 28 Apr 2023 04:27 AM
Last Updated : 28 Apr 2023 04:27 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் பண்பலை வானொலி (எஃப்.எம். ரேடியோ) இணைப்பை மேம்படுத்தும் வகையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளரும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்புற பகுதிகளில் ரேடியோ ஒலிபரப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதையொட்டி, பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் லடாக், அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள 84 மாவட்டங்களில், 91 புதிய எஃப்.எம். ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
இதன் மூலம் கூடுதலாக 2 கோடி மக்களை ரேடியோ சேவை சென்றடையும். ஏறத்தாழ 35,000 சதுர கி.மீ. பரப்பில் ரேடியோ ஒலிபரப்பை அதிகரிக்க முடியும்.
மக்களைச் சென்றடைவதில் ரேடியோக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று பிரதமர் மோடி உறுதியாக நம்புகிறார். அதிக அளவிலான மக்களிடம் பேச `மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். இதன் 100-வது நிகழ்ச்சி ஏப். 30-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, 91 புதிய எஃப்.எம். ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT