Published : 28 Apr 2023 07:36 AM
Last Updated : 28 Apr 2023 07:36 AM

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000; 200 யூனிட் மின்சாரம் இலவசம் - கர்நாடகாவில் ராகுல் காந்தி அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 3 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தக்ஷின கன்னடா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். உடுப்பியில் உள்ள கபு என்ற இடத்தில் மீனவர் அமைப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பல கோடிகளை செலவழித்து எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் வாங்கி இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏக்களே கூறியுள்ளனர்.

அமைச்சர்கள் எந்த வேலை ஆக வேண்டும் என்றாலும் 40 சதவீதம் கமிஷன் வாங்கினர். மக்களின் வரிப்பணத்தை பாஜகவினர் கல்வி, சுகாதாரத் தேவைக்காக பயன்படுத்தவில்லை. மாறாக அவர்களுடைய சில கோடீஸ்வர நண்பர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் பணம் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வோம். எங்களின் ஆட்சியில் நிச்சயம் ஊழல் இருக்காது என உறுதி அளிக்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமோ பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடும் ரூ.1 லட்சம் வட்டியில்லா கடனும் வழங்கப்படும். மீன்பிடி படகுகளுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.25 மானியம் வழங்கப்படும். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x