Published : 28 Apr 2023 05:51 AM
Last Updated : 28 Apr 2023 05:51 AM
சென்னை: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்ரிநாத் கோயில் நேற்று காலை 7:10 மணிக்கு முழு வேத மந்திரங்கள் மற்றும் சடங்குகளுடன் பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
சார்தாம் யாத்திரையாக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பத்ரிநாத் கோயில் 15 குவின்டால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4 மணி முதல் கோயில் திறக்கும் பணி தொடங்கியது. கோயில் தலைமை அர்ச்சகர் ராவல், ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோயில் கதவுகள் திறக்கப்பட்டன.
தலைமை அர்ச்சகர் வி.சி.ஈஸ்வர் பிரசாத்நம்பூதிரி, சந்நிதியில் உள்ள ஸ்ரீ பத்ரிநாதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்தார். பிரதமர் மோடியின் பெயரில் முதல் பூஜை நடந்தது.
மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பக்தர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு சார்தாம் யாத்திரையை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளதாகக் கூறினார்.
பத்ரிநாத் கோயில் வாசல் திறப்பதற்கு ஒருநாள் முன்பாகவே கோயிலில் கூட்டம் அலைமோதியது. லேசான பனிப்பொழிவு மற்றும் மழைக்கு நடுவே, இசைக் குழுவினரின் இன்னிசையும், உள்ளூர் பெண்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் பத்ரிநாத் பகவானின் துதியும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன. ஹெலிகாப்டரில் இருந்து மலர்களைத் தூவி பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்ரிநாத்தில் அகண்ட ஜோதி மற்றும் ஸ்ரீ பத்ரிநாத் தரிசனம் செய்தனர்.
கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத்மற்றும் பத்ரிநாத் கோயில்கள் திறக்கப்பட்டதை அடுத்து, உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT