Published : 27 Apr 2023 12:20 PM
Last Updated : 27 Apr 2023 12:20 PM
புதுடெல்லி: காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துவிட்டன; இனி வாக்குறுதி தரமுடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநில பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது பிரதமர், "கர்நாடக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையானது பிரச்சாரத்திற்காக பாஜக தலைவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் வெளிப்படுகின்றது. 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் அடங்கிய சிறு குழுக்களை உருவாக்குங்கள். அவர்கள் கர்நாடகாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இரட்டை எந்திர ஆட்சியின் நன்மைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். அனைத்து செய்திகளையும் நீங்கள் டைரியில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மணிநேரம் செலவழியுங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசி வாங்குங்கள்" என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பூத் கமிட்டி நிர்வாகிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, "ஒரு ட்ராக்டரில் மாருதி காரின் சக்கரத்தை மாட்டினால் அது வேலை செய்யுமா? ஒரு போதும் வேலை செய்யாது. இரட்டை எந்திர ஆட்சி போன்ற ஒரே சீரான அமைப்பினால் தான் வளர்ச்சியை உருவாக்க முடியும். இதனை மக்களிடம் கூறுங்கள். மக்களிடம் நீங்கள் நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அது மற்றவர்களின் வேலை. நான் இந்த சின்னச் சின்ன விஷயங்களை தொடர்ந்து சொல்லியிருக்கிறேன். நீங்கள் இதை வாக்காளர்களிடம் சொல்லுங்கள்.
தெற்கில் உள்ளவர்களும் ‘ரேவடி’ என்ற வார்த்தையின் அர்த்தைத்தை புரிந்து வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத சில அரசியல் கட்சிகள் இந்த கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளன. இதனால் எல்லாம் எப்படி ஒரு அரசு இயங்க முடியும். இன்று, நாளை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு ஒரு அரசாங்கம் செயல்பட முடியாது. அது வருங்கால சந்ததிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
இமாச்சலப்பிரதேசத்தில் மக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட காத்திருக்கிறார்கள். ராஜஸ்தான் மக்கள் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் போராட்டம் நடத்த தொங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி இனி வாக்குறுதிகள் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. காங்கிரஸ் என்றாலே ஊழல் மற்றும் பொய்யான வாக்குறுதி என்று அர்த்தம். இனி காங்கிரஸ் கட்சி என்ன வாக்குறுதிகளை வழங்கும். அதன் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன.
இப்போது மற்ற கட்சியினரும் இதே விஷயங்களை பின்பற்றுவார்கள் என மக்கள் சொல்லலாம். ஆனால் அவர்களால் இதனைச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். இது ஒரு தவம். பாஜகவால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். அதனால் ரகசியங்கள் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டதில்லை. நான் இதை வெளிப்படையாகவே சொல்கிறேன். முதல் அணியாக நாம் மக்களுக்கு வேலை செய்வோம். நமக்கு மக்களின் ஆசீர்வாதம் இருக்கிறது. ஆனால் இந்த விஷயங்கள் அனைத்து பூத்களுக்கும் சென்று சேர்வதை நாம் உறுதி செய்யவேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT