Published : 27 Apr 2023 07:03 AM
Last Updated : 27 Apr 2023 07:03 AM
புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் சிக்கலானது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதால், கோவாவில் அடுத்தவாரம் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் கோவாவில் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராக உள்ளதால், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்திருந்தார். இதை ஏற்று பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவினர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பனாமா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், பிலாவல் புட்டோவின் இந்திய பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘கோவாவில் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ பங்கேற்பதை இருதரப்பு உறவாக பார்க்க கூடாது. இந்த கூட்டத்தை பொருத்தவரை, நாங்கள் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பினர்கள். அதனால், இந்த கூட்டத்தில் பங்கேற்கிறோம். இந்தாண்டு எஸ்சிஓ கூட்டத்துக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. அதனால் இந்த கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் சிக்கலானது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். அந்த நிலை ஒருநாள் ஏற்படும் என நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்’’ என்றார்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக, ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளதால், அவருக்கும், பிலாவல் புட்டோவுக்கும் இடையே கோவாவில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க வரும் மற்ற உறுப்பு நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். ஆனால், அது போன்ற திட்டம் எதுவும் ஜெய்சங்கர் மற்றும் பிலாவல் புட்டோ இடையே இல்லை. எஸ்சிஓ கூட்டத்துக்கு இந்தியா தலைமை தாங்கி நடத்துவதால், மரியாதை நிமித்தமாக பிலாவல் பு ட்டோவுடன், அமைச்சர் ஜெய்சங்கர் கை குலுக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT