Published : 26 Apr 2023 07:15 PM
Last Updated : 26 Apr 2023 07:15 PM

“எங்கள் மனதின் குரலை பிரதமர் மோடி கேட்க மாட்டாரா?” - தொடர் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகள்

புதுடெல்லி: எங்கள் மனதின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்று டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வரும் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜக எம்பியாகவும் இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங்-குக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், பின்னர் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிறு முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மல்யுத்த வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல், வரும் ஞாயிறு அன்று ஒலிபரப்பாக உள்ளது. இது 100வது மனதின் குரல் நிகழ்ச்சி என்பதால், இதை பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதனை தொடர்புபடுத்தி போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், "பிரதமர் அவர்களே, பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம் என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருவரின் மனதின் குரலையும் கேட்கிறீர்கள். எங்களின் மனதின் குரலை உங்களால் கேட்க முடியாதா?

நாங்கள் பதக்கம் வென்றால் எங்களை உங்களின் இல்லத்திற்கு அழைத்து அதிக மரியாதை செய்கிறீர்கள். எங்களை உங்களின் மகள்கள் என்று அழைக்கிறீர்கள். தற்போது நாங்கள் எங்களின் மனதின் குரலை கேளுங்கள் என்று கோரி போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்களை சந்தித்து எங்களின் கோரிக்கையை தெரிவிக்க விரும்புகிறோம். எங்களை சந்திக்க நீங்கள் முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், தாங்கள் எதற்காக போராடுகிறோம் என்ற செய்தி பிரதமர் மோடியை இன்னும் எட்டவில்லை என்றே கருதுகிறோம் என தெரிவித்துள்ள சாக்சி மாலிக், அவரை நாங்கள் சந்திக்க முடிந்தால், அவரால் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். மேலும், கடந்த 4 நாட்களாக ஜந்தர் மந்தரில் கொசுக்கடிக்கு மத்தியில் போராடிக் கொண்டிருக்கும் தங்களை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திக்காதது ஏன் என்றும் சாக்சி மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஸ்மிருதி இரானி தற்போது ஏன் அமைதி காக்கிறார். கடந்த 4 நாட்களாக கொசுக்கடிக்கு மத்தியில் நாங்கள் சாலையிலேயே உறங்குகிறோம். ஆனால், நீங்கள்(ஸ்மிருதி இரானி) ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கு வர வேண்டும். நாங்கள் கூறுவதை கேட்க வேண்டும். எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என சாக்சி மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x