Published : 26 Apr 2023 01:12 PM
Last Updated : 26 Apr 2023 01:12 PM
புதுடெல்லி: டெல்லியில் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் இலவசப் பேருந்து பயண வசதிகள் விரைவில் அமலாக்கப்பட உள்ளன. அண்மையில் நடந்த தொழிலாளர் துறை கூட்டத்தில் முதல்வர் கேஜ்ரிவால் அதிகாரிகளுக்கு இதனை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம், தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், டெல்லி மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இத்துறையில் சுமார் ரூ.4,000 கோடி வரை செலவு செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கேஜ்ரிவால் சுட்டிக் காட்டினார். இந்தத் தொகை, டெல்லியின் ஒவ்வொரு தொழிலாளரையும் சென்றடையும் வகையில் திட்டங்கள் அமைக்கவில்லை என அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தினார்.
எனவே இந்தத் தொகையில் டெல்லியின் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் ஆகியவற்றையும் செய்ய முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மேலும் பேசுகையில், ‘வெறும் 400-500 மனுக்களின் அடிப்படையில் டெல்லியின் தொழிலாளர்களுக்கு மட்டும் இத்துறையின் சார்பில் பலன் அளிப்பது ஒரு அர்த்தமற்ற செயல்.
இந்த துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 3,000 முதல் 4,000 கோடி ரூபாய் வரை செலவாகாமல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் டெல்லியின் 13 லட்சம் தொழிலாளர்களுக்கும் பல்வேறு வகை பலன்கள் அளிக்கப்பட வேண்டும்.
வரும் ஜூன் மாதத்திற்கு முன்பாக இத்துறையின் அதிகாரிகள் வருவாய் துறையினருடன் இணைந்து டெல்லியின் தொழிலாளர்கள் அனைவரையும் பதிவு செய்ய வைக்க வேண்டும். இன்னும், ஒரு வாரத்திற்குள் டெல்லியில் 60 வயதிற்கும் அதிகமான தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும். அவர்களது கைப்பேசி எண்களை கண்டறிந்து அவற்றின் மூலம், குறுந்தகவல்களால தொழிலாளர் துறையின் பலன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT