Published : 26 Apr 2023 04:22 AM
Last Updated : 26 Apr 2023 04:22 AM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலில் பயணிகள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக சென்ற அவருக்கு பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் 2-வது நாளான நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: கேரள மாநிலத்துக்கு வருவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுளின் தேசமான கேரளாவில் பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தற்போது கேரளாவில் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கேரள மக்கள் மிகவும் பயனடைவார்கள்.
கேரள மக்கள் விழிப்பானவர்கள். நன்கு படித்தவர்கள். கடின உழைப்பும், மனிதாபிமானமும்தான் கேரள மக்களின் அடையாளங்களாக உள்ளன. கேரளா முன்னேறினால், அந்த வளர்ச்சி இந்தியாவின் வேகமான வளர்ச்சியாக இருக்கும். கேரளா முன்னேறினால், நாடும் வேகமாக முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கூட்டாட்சியை மேம்படுத்தி வருகிறது. மாநிலங்களின் வளர்ச்சியை, தேச முன்னேற்றத்தின் ஆதாரமாக நான் கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
பின்னர், வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்கள், பயணிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, மாணவர்கள் தாங்கள் வரைந்த ஓவியங்களை அவரிடம் காண்பித்து மகிழ்ந்தனர்.
திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேஇயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வாட்டர் மெட்ரோ’ சேவை
முன்னதாக, கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் கொச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். சுற்றுலா பயணிகளையும் இது வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சி ‘வாட்டர் மெட்ரோ' திட்டமானது துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம்.
கொச்சி ‘வாட்டர் மெட்ரோ' திட்டம் ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடியை மலையாள நடிகர் உன்னி முகுந்தன், சந்தித்துப் பேசினார். இதுகுறித்து உன்னி முகுந்தன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நான் குஜராத்தில் 20 ஆண்டுகள் வசித்துள்ளேன். எனக்கு 14 வயதாக இருக்கும்போது, பிரதமர் மோடியை குஜராத்தில் பார்த்து பரவசப்பட்டேன். இன்று அவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. 45 நிமிட சந்திப்பின்போது அவருடன் குஜராத்தி மொழியில் பேசினேன். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை’ என்று தெரிவித்துள்ளார். பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் முகநூலில் அவர் வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்தவ அமைப்புகள் நன்றி: சைரோ - மலபார் ஆலய பேராயர் கார்டினல் ஜார்த் ஆலன் செர்ரி, மலங்கரா ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்தின் பசிலியோஸ் மர் தோமா மேத்யூஸ்-3 உள்ளிட்டோர் பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்தனர். வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்ததற்காக அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு, கிறிஸ்தவ அமைப்புகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கிறிஸ்தவ அமைப்பினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார். வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம். மேலும் கேரள மாநிலத்துக்கு தேவையான உதவியையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை பிரதமர் பரிவுடன் கேட்டறிந்தார். அவற்றை பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT