Published : 25 Apr 2023 08:53 AM
Last Updated : 25 Apr 2023 08:53 AM

கொச்சி | நாட்டின் முதல் ’வாட்டர் மெட்ரோ’ போக்குவரத்து சேவை: சிறப்பம்சங்கள் என்ன?

கொச்சி வாட்டர் மெட்ரோ சேவையின் படகு

கொச்சி: கேரள மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.25) நாட்டின் முதல் 'வாட்டர் மெட்ரோ' சேவையைத் தொடங்கிவைக்கிறார்.

முன்னதாக நேற்று (ஏப்.24) பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலம் வந்தார். ஐஎன்எஸ் கருடா விமான தளத்தில் கேரள பாரம்பரிய உடையில் தரையிறங்கிய அவர், சேக்ரட் ஹார்ட் கல்லூரி வரை நடந்து சென்றார். சுமார் 1.8 கி.மீ. தொலைவு வரை நடந்து சென்ற பிரதமர் மோடியை சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள் மலர் தூவி வரவேற்றனர்

கொச்சியில் இருந்து இன்று (ஏப்.25) காலை பிரதமர் நரேந்திர மோடி கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு செல்கிறார். அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் ரூ.3,200 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி, அடிக்கல் நாட்டுகிறார். அப்போது கொச்சி நீர்வழி மெட்ரோ சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவை: 5 தகவல்கள்

1. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவை மூலம் கொச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். சுற்றுலா பயணிகளை இது ஈர்க்கும்.

2. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' , அத்துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர் நீதிமன்றம் - விபின் மற்றும் விட்டிலா - கக்கநாட் இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும். இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம். அன்றாடம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை தொடரும். பீக் அவர்களில் உயர் நீதிமன்றம் - விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கொச்சி வாட்டர் மெட்ரோ இயக்கப்படும்.

3. பயணிகளின் சவுகரியத்தைக் கருதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20 முதல் ரூ.40 வரை டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகச் செல்லக்கூடிய பயணிகள் ட்ராவல் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர சந்தா ரூ.600, அரையாண்டு சந்தா ரூ.1500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் பாஸ்களை முனையங்களில் உள்ள கவுன்ட்டர்களில் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

4. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' திட்டமானது ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெர்மன் வங்கி, KFW நிதி வழங்கியுள்ளது. கொச்சி கப்பல்கட்டுமான லிமிடட் தான் வாட்டர் மெட்ரோ படகுகளை கட்டமைத்துள்ளது.

5. முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவையில் இணைக்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x