Published : 25 Apr 2023 05:08 AM
Last Updated : 25 Apr 2023 05:08 AM
கொல்கத்தா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நேற்று சந்தித்துப் பேசினார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக.வை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தனர். அப்போது பாஜகவை எதிர்க்க ஒரணியில் திரள்வது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலையும் நிதிஷ் குமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவை நிதிஷ் குமார் கொல்கத்தாவில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் 3 பேரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, மம்தா கூறும்போது, “பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நிதிஷ் குமாருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஜெயபிரகாஷ்ஜியின் (நாராயண்) இயக்கம் பிஹாரில்தான் தொடங்கியது. அதுபோல அனைத்துக் கட்சி கூட்டத்தை பிஹாரில் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.
நிதிஷ் குமார் பேசும்போது, “மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் சுய விளம்பரத்தை மட்டுமே தேடிக் கொள்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை” என்றார்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறும்போது, “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமானால், ‘ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர்’ என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும். அதாவது பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே களமிறக்க வேண்டும். இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்கு சிதறுவது தடுக்கப்பட்டு பாஜக தோல்விக்கு வழிவகுக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT