Published : 06 Sep 2017 09:22 AM
Last Updated : 06 Sep 2017 09:22 AM

ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்; பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் போலீஸார்- லட்டு பிரசாதங்களை ஏலம் எடுத்த முஸ்லிம்கள்

ஹைதராபாத்தில் நேற்று நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகருக்கு படைத்த லட்டு பிரசாதத்தை முஸ்லிம்களும் ஏலம் எடுத்தனர்.

ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பல்வேறு ஏரி, குளங்களில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதைத் தடுக்க 26 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 354 கிலோ மீட்டர் தொலைவுக்கு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியை தெலங்கானா உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்மா ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

விநாயகர் சிலைகளுக்கு படையலிட்ட லட்டு பிரசாதங்களை ஊர்வலத்தின்போது ஏலம் விடுவர். அந்த வகையில் இந்த ஆண்டு ஹைதராபாத் பண்டகூடு பகுதியில் லட்டு ஏலம் விடப்பட்டது. இதில் இந்துக்களும், முஸ்லிம்களும் லட்டு பிரசாதத்தை ஏலம் எடுக்க போட்டி போட்டனர். அப்போது இர்பான் என்பவர் ரூ.87 ஆயிரத்திற்கு லட்டு பிரசாதத்தை ஏலம் எடுத்தார். இதேபோல ராமாந்த்பூர் பகுதியில் முகமது அலி என்பவர் ரூ.70,116-க்கு லட்டு பிரசாதத்தை ஏலம் எடுத்தார்.

ரூ.15.6 லட்சத்துக்கு ஏலம்

ஹைதராபாத்தின் பாலப்பூர் பகுதியில் 60 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை உசைன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டது. இந்த விநாயகரை போலவே இவரது லட்டு பிரசாதமும் மிகவும் பிரபலம். இதனை ஏலத்தில் எடுக்க ஆண்டுதோறும் கடும் போட்டி நிலவும். அந்த வகையில் இந்த ஆண்டு லட்டு பிரசாதம் 21 கிலோ எடையில் செய்யப்பட்டது. இதை திருப்பதி ரெட்டி எனும் பக்தர் ரூ.15.6 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

இந்த விநாயகருக்கு படைத்த லட்டு 2012-ல் ரூ.7.5 லட்சத்துக்கும், 2013-ல் ரூ 9.26 லட்சத்துக்கும், 2014-ல் ரூ.9.5 லட்சத்துக்கும், 2015-ல் ரூ.10.32 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x